ஆகஸ்ட் 06, 2009

கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் )

அறம் பொருள் இன்பமென
வாழ்வை வகுத்து
எக்காலும் ஏற்புடையதை
ஈரடிக்குள் தொகுத்து
மந்தையாகாமல் மனிதனை
மனிதானாக்கும் இலக்கியம் !
*
இல்லற மேன்மையையும்
இனியவைக் கூறலையும்
இயல்பாய்ச் சொன்ன காவியம் !
*
காதலின் நெறி எது
கற்பின் செறிவெது வென்று
கவிதையில் சொன்னக் காப்பியம் !
*
நட்பின் உயர்வெது
நல்லோர் பண்பெது வென்று
நமக்குணர்த்தும் பொதுமறை !
*
நாடாளும் முறை எது
நாடள்வோர் நிறை எதுவென
நற்குடிக்கு சொன்ன தமிழ்மறை !
*
பசலைத் துயரத்தையும்
பழமை நட்பையும்
படைப்பில் அடக்கிய காவியம் !
*
குடிமை சிறப்பையும்
குற்றங் கடிதலையும்
குறளாய் தந்த ஓவியம் !
*
கல்லாமையின் சிறுமையையும்
கள்ளாமையின் பெருமையையும்
கல்வெட்டாக்கிய காப்பியம் !
*
புறங் கூறாமையையும்
பொறாமைக் கொள்ளாமையையும்
புரிய வைக்கும் இலக்கியம் !
*
வினைத் தூய்மை நாடவும்
விலைமாது தவிர்க்கவும்
விரும்பச் சொல்லும் படைப்பு !
*
சிற்றினம் சேராமையும்
செய்நன்றி மறவாமையையும்
செய்தியாய் தந்த சிற்பம் !
*
வாய்மையின் அழகையும்
வறுமையின் நிகழ்வையும்
வகுத்திட்ட இலக்கியம் !
*
பெருமை எதுவென்றும்
பேதைமை எதுவென்றும்
பிரித்து சொன்ன தமிழ்மறை !
*
வள்ளுவம் கற்றவன் சிறப்பான் !
மறைந்தாலும் ...அவன்
மற்றவர் நினைவில் இருப்பான் !.
*
*
(மலேசியாவில் 2005_ல் நடந்தேறிய முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டி, உலக அளவில் வள்ளுவம் பற்றிய புதுக்கவிதைக்கான ஆறுதல் பறிசை வென்ற எனது கவிதை இது)
*

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

திருக்குறளை மேம்படுத்திச் சொன்ன அழகான கவிதை.

இப்போதான் மேவியின் பதிவில் திருக்குறள் இந்தக்காலத்துக்குத் தேவையற்றது எழுதியிருந்ததைப் பார்த்துப் பின்னூட்டம் இட்டு வந்தேன்.
http://mayvee.blogspot.com/

சி.கருணாகரசு சொன்னது…

தவறாது தளம் வ‌ரும் உங்களுக்கு மிக்க நன்றிங்க ஹேமா. நீங்க சொன்ன மேவீ தளத்திற்கும் சென்று பார்க்கிறேன்.ந‌ன்றி.

Related Posts with Thumbnails